search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை வசதி"

    • மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.
    • மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் வேட்டுனூர் சாலையானது நாகுடியிலிருந்து மாணவநல்லூர், வேட்டனூர் வழியாக நிலையூர், செல்லப்பன் கோட்டை, பானாவயல், தண்டலை உள்ளிட்ட கிராமங்களை கடந்து மணமேல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையை சென்றடைகிறது.

    சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலையில் தினம்தோறும் அறந்தாங்கி, நாகுடி மற்றும் மணமேல்குடி வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிக்கும், பொதுமக்கள் வேலைக்கும் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் வேட்டனூர் கிராமத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

    ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்ட அவர்கள் பேருந்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இருந்ததால் அவர்களின் பணிகள் மற்றும் நலன் கருதி பொதுமக்கள் தாங்களாகவே சாலை மறியலை கைவிட்டனர்.

    மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.

    • போதமலை தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
    • இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை. கரடு முரடான பாதைகளில் தான் பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச் சுமையாக தான் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நாளை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கீழூரில் ஒரு வாக்குச்சாவடி மையமும், கெடமலையில் ஒரு வாக்குச் சுவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கீழூர் வாக்குச்சாவடி மையத்தில் 428 ஆண் வாக்காளர்களும் 417 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் கெடமலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் 159 ஆண்களும் 138 பெண்களும் வாக்களிக்க உள்ளனர். நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடி மையங்களிலும் மொத்தம் 1142 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இன்று காலை மேற்கண்ட இரண்டு வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

    கீழூர் வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் வடுகம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் இருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள், விவி பேட் எந்திரம், கண்ட்ரோல் யூனிட் உள்பட 5 எந்திரங்களை மண்டல அலுவலர் விஜயகுமார், உதவி மண்டல அலுவலர் ஜெயக்குமார் வாக்குச்சாவடி மைய அதிகாரி ராஜாமணி உள்பட 4 தேர்தல் அலுவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ரமேஷ், ஊராட்சி செயலாளர் பரமசிவன் உள்பட 10 பேர் வாக்கு பதிவு எந்திரங்களை நடந்தே தலைச்சுமையாக பொதுமக்கள் உதவியுடன் மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அதேபோல் கெடமலை வாக்குச்சாவடி மையத்திற்கு புதுப்பட்டி மலை அடிவாரத்திலிருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட 5 எந்திரங்களும் நடந்தே கொண்டு செல்லப்பட்டன. மண்டல அலுவலர் பழனிச்சாமி, உதவி மண்டல அலுவலர் சுரேஷ், வாக்குச்சாவடி மைய அதிகாரி பிரபாகரன் மற்றும் போலீசார் உள்பட 10 பேர் சென்றனர். 

    • சின்ன கொனேலா மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்றனர்.
    • இரண்டு மலைகள் வழியாக சுமார் 3 மணி நேரம் மகன் உடலை சுமந்தபடி அவரது மலை கிராமத்தை அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் சின்ன கொனேலா என்ற மலை கிராமம் உள்ளது. அடிவாரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை.

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையா இவருடைய மனைவி சீதா. தம்பதியின் 2-வது மகன் ஈஸ்வர ராவ் (வயது 2½). கோதையா தனது மனைவி குழந்தைகளுடன் விஜயநகரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவருடைய மகன் ஈஸ்வரராவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். அங்கு சிறுவன் பரிதாபமாக இறந்தான். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் உடலை எடுத்துச் சென்றனர்.

    சின்ன கொனேலா மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் உடலை இறக்கி வைத்து விட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று விட்டனர்.

    அப்போது இருட்ட தொடங்கியது. அவர்களால் மலை கிராமத்துக்கு நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி கோதையா அவருடைய மனைவி சீதா இருவரும் மலை அடிவாரத்தில் தனது மகன் உடலுடன் தங்கி இருந்தனர்.

    மறுநாள் காலையில் கோதையா தனது மகன் உடலை சுமந்தபடி நடக்கத் தொடங்கினார். இரண்டு மலைகள் வழியாக சுமார் 3 மணி நேரம் மகன் உடலை சுமந்தபடி அவரது மலை கிராமத்தை அடைந்தனர். அங்கு சிறுவன் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. மலை கிராமத்தில் தற்போது வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர்.

    அவர்கள் எளிதில் நகரப் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வர முடியவில்லை. உடல்நிலை குறைவு மற்றும் பிரசவ காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மலைகிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள்.
    • பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மாவடப்பு, குழிப்பட்டி குருமலை, மேல்குருமலை, பொறுப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சு வயல், ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட குடியிருப்புகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இவர்கள் பாதை வசதியை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதைத்தொடர்ந்து திருமூர்த்தி மலையிலிருந்து குருமலை வரை உடுமலை வனச்சரகத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணி தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனால் மலைவாழ் மக்கள் அவசர கால தேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில் குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது 22) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மலைவாழ் மக்கள் அவரை தொட்டில் கட்டி சுமார் 7 கிலோமீட்டர் சுமந்து வந்து எரிசனம்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நாகம்மாளுக்கு குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி நாகம்மாளை தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். இல்லையென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டி ருக்கும்.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    பாதை வசதி கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றோம்.ஆனால் அதற்கான அனுமதி அளித்த பின்னரும் கூட பாதை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் பிரசவம், விபத்து, அவசரகால சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக கொண்டுவரப்பட்ட போது தாயும் சேயும் இறந்து போன சோக சம்பவம் நடந்துவிட்டது.

    எனவே எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க குருமலை, குழிப்பட்டி, மாவடப்புக்கு வர வேண்டாம். முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள். இல்லையென்றால் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்க மாட்டோம்.மேலும் நாங்கள் வாக்களிப்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அமராவதி வனச்சரக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 3200 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கோடந்தூர், மாவடப்பு, தளிஞ்சி உள்ளிட்ட பகுதி களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தலின் போது பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளுக்கு வரும் அதிகாரிகளிடம் அப்பகுதி பொது மக்கள் தங்களது கோரிக்கை களை எடுத்து சொல்லலாம் என காத்திருந்தனர்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை. மேலும் தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவு ஆய்வுக்கு செல்லவில்லை. இதனால் மலைவாழ் பகுதியில் தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகளே இல்லாமல் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.

    • விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.

    காங்கயம்:

    மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி பகுதியில் நொய்யல் ஆறு உற்பத்தியாகி கோவை திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக 172 கிலோ மீட்டர் தூரம் கடந்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் ஒரத்துப்பாளையம் அணை அருகே கத்தாங்கண்ணி, வயக்காட்டுப்புதூர், கணபதிபாளையம், வெங்கலப்பாளையம உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமமக்கள் போதிய சாலை வசதி இல்லாததால் பரிசல் மூலம் நொய்யல் ஆற்றை கடந்து சென்னிமலை, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களாகியும் சாலை வசதி மற்றும் ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் ஆற்றின் இரு கரையிலும் கம்பங்கள் நட்டு அதில் கம்பிகளை கட்டியுள்ளனர். பரிசலில் ஏறியபின் அந்த கம்பிகளை பிடித்து கொண்டு பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.

    சாலை வழியாக சென்றால் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் வெங்கலப்பாளையம் பகுதியில் பரிசலில் ஆற்றை கடந்து செல்லும் போது பயண தொலைவு குறையும் என்பதால் இவ்வாறு பரிசலை பயன்படுத்தி ஆற்றை கடப்பதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

    தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் 2 ஆயிரம் கன அடி வரை சென்று கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் நொய்யல் ஆற்றை கடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, பரிசலில் செல்ல முடியாத நிலையில் இன்றும் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு ஊத்துக்குளி, சென்னிமலை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு பாலம் அமைக்க கோரி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றனர்.

    • மருத்துவ குழு அவ்வப்போது ஆய்வு செய்து, முடிவுகளை மாநகராட்சிக்கு தெரிவிப்பது வழக்கம்.
    • அய்யனார் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து காரசாரமாக பேசினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு கேப்பர் மலை மற்றும் திருவந்தி புரம் பகுதியிலிருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கி ருந்து கடலூர் மாநகர மக்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரமாக உள்ளதா? என்பதனை மருத்துவ குழு அவ்வப்போது ஆய்வு செய்து, முடிவுகளை மாநகராட்சிக்கு தெரிவிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை 4 பேர் கொண்ட மருத்துவ குழு திருவந்திபுரம் மலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். குடிநீர் தரமாக வழங்கப்படுகிறதா? குளோரின் சரியான முறையில் கலக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக சென்ற ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார், மருத்துவ குழுவினரிடம் சென்று இந்த ஊராட்சி பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. எங்கள் பகுதியில் குடிநீர் கலங்கலாக வருகின்றது. இது தொடர்பாக நீங்கள் ஏன் ஆய்வு செய்ய வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர்கள் வந்த வாகனத்தை வழி மறைத்து தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து காரசாரமாக பேசினார். சிறிது நேரம் பேசிவிட்டு ஒன்றியகுழு துணைத் தலைவர் அய்யனார் அங்கி ருந்து சென்றுவிட்டார். இதையடுத்து மருத்துவக் குழு வினர் தங்களின் பணிகளை நிறைவு செய்து அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • இங்குள்ள குன்று மேட்டுப்பகுதி தெருவில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
    • மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம் 17 வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குன்று மேட்டுப்பகுதி தெருவில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் சாலை வசதிகள் இல்லாமல் மண்சாலையாகவே இருந்து வருகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலை சேரும் சகதிமாக மாறியது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலை வசதி அமைத்து தர வேண்டும் என வடக்கநந்தல் பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் சேரும் சகதியுமாக இருந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வசதி அமைத்து தரவில்லை எனில், ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.

    • ஏரியூர் அருகே சாலை வசதி வேண்டி வட்டாச்சியர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
    • காமராஜர் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதிக்கு சாலை அமைக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, பொன்னேரி காடு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதிக்கு சாலை அமைக்கப்பட்டது.

    அதன் பின்பு எந்த அரசும் முன்னெடுக்காததால், தற்போது மண் பாதையாகவும், குண்டும் குழியுமான சாலையாகவும் மாறி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இப்பகுதி மக்கள், சாலை வசதி வேண்டி தேர்தலை புறக்கணித்து வீடுகளின் மேல் கருப்பு கொடியை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், தேர்தல் முடிந்தவுடன் சாலை வசதி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தனர்.

    ஆனால் தற்போது வரை சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படாததால் இப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் மனு அளித்தனர்.

    விரைவில் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தரவில்லை எனில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடிபுகும் போராட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடத்துவோம் என தெரிவித்தனர்.

    • ஈசல்தட்டு பகுதியில் சின்ன கூழையன் என்பவர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறியதாக தெரிகிறது
    • ஒரு உயிரை காப்பதற்கு பல உயிர்களையும் பணயம் வைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டுமலை, கோடந்தூர், பொறுப்பாறு, தளஞ்சி,தளிஞ்சிவயல்,ஈசல் தட்டு,குழிப்பட்டி, குருமலை, மேற்கு குருமலை, கருமுட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நிலையான வருமானம் இல்லாததால் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் வடுமாங்காய் பறித்தல்,தேன் எடுத்தல் போன்ற உயிரை பணயம் வைக்கும் சுய தொழில்களிலும் ஈடுபட வேண்டிய சூழல் மலைவாழ் மக்களுக்கு ஏற்படுகிறது.

    அந்த வகையில் ஈசல்தட்டு பகுதியில் சின்ன கூழையன்(வயது 65) என்பவர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் சின்ன கூழையனை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி எடுத்து வந்தனர்.அவசரகால உதவிகள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாதை வசதி அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. பிரசவம்,எதிர்பாராமல் நடக்கும் விபத்து,அவசர கால உதவியை பெறுவதற்கு வனப்பகுதி வழியாக பயணித்து அடிவாரத்தை அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் உயிரை காக்கும் பொன்னான நேரம் வீணாகி விடுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் வனப்பகுதியில் தொட்டில் கட்டி தூக்கி வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.இதற்காக திடகாத்திரமான உடல்வாகு கொண்ட நபர்கள் தேவை. ஒரு உயிரை காப்பதற்கு பல உயிர்களையும் பணயம் வைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி வனப்பகுதியில் பாதை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் தேன்எடுத்தல், வடுமாங்காய் பறித்தல் போன்ற உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளும் தொழில்களுக்கு தகுந்த உபகரணங்களும், விழிப்புணர்வும் வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • திருப்பூர் ஊத்துக்குளி அருகே நஞ்சராயன் குளம், 310 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
    • ஆண்டு முழுக்க அரிய வகை பறவைகள் வந்து செல்லும் இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி அருகே நஞ்சராயன் குளம், 310 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஆண்டு முழுக்க அரிய வகை பறவைகள் வந்து செல்லும் இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.பொதுப்பணித்துறை வசமுள்ள இக்குளம், அதிகாரபூர்வமாக வனத்துறை வசம் ஒப்படைப்பதற்கான துறை ரீதியான பணிகள் நடந்து வருகின்றன.

    கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சேபனை பெறப்பட்டது. இக்குளத்தையொட்டி சர்க்கார் பெரிய பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை ஆகிய 3 கிராமங்கள், இக்குளத்தையொட்டி உள்ள குடியிருப்புவாசிகள், தங்களுக்கு குளக்கரை வழியாக பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடிதம் வழங்கினர். அந்த வகையில் 13 விண்ணப்பங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

    இந்த விண்ணப்பம் தொடர்பாக வனத்துறையினர் கள ஆய்வு செய்து, விதிப்படி அவர்களுக்கு வழித்தடம் வழங்கலாமா, வழித்தட வசதி ஏற்படுத்தி தருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு வழங்கியுள்ளனர். இதையடுத்து அடுத்தக்கட்ட பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சாலை வசதியில்லாமல் இருமலைகளுக்கு இடையே மூங்கில்களில் தொட்டில் கட்டி 6 முதல் 40 கி.மீ., தூரம் வரை தூக்கிச்செல்கின்றனர்.
    • வன உரிமை குழுவில் திருமூர்த்திமலை முதல் குருமலை வரை ரோடு அமைக்க கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருமூர்த்திமலை - குருமலை பகுதிக்கு ரோடு வசதி செய்து கொடுத்து மலைவாழ் மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை தாலுகாவில் உள்ள மலை கிராமங்களில் 3,500க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக ரோடு வசதி கேட்டு போராடி வருகின்றனர்.முதியவர்கள், கர்ப்பிணிகள், நடமாட முடியாதவர்கள், பாம்பு கடித்தவர், உடல்நிலை பாதித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது சிரமமாக இருக்கிறது.சாலை வசதியில்லாமல் இருமலைகளுக்கு இடையே மூங்கில்களில் தொட்டில் கட்டி 6 முதல் 40 கி.மீ., தூரம் வரை தூக்கிச்செல்கின்றனர்.

    சமவெளி பகுதிக்கு வந்து ஆம்புலன்சில் செல்வதற்குள் உயிரிழப்பும் ஏற்படுகிறது.மலைகிராமங்களில் இருந்து வேறு வழித்தடத்தில் மருத்துவமனை செல்ல 110 கி.மீ., சுற்றிவர வேண்டியுள்ளது. பல்வேறு கோரிக்கையை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் இதுநாள் வரை பணி துவங்கவில்லை.முதல்கட்டமாக திருமூர்த்திமலை முதல், குருமலை வரை ரோடு அமைத்தால் 6 கி.மீ., தூரத்தில், அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட முடியும்.

    110 கி.மீ., சுற்றிவர வேண்டிய அவசியம் இருக்காது. உயிரிழப்பையும் தடுக்க முடியும்.வன உரிமை சட்டப்படி ரோடு வசதி செய்யலாம். வன உரிமை குழுவில் திருமூர்த்திமலை முதல் குருமலை வரை ரோடு அமைக்க கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ரோடு வசதியை செய்து கொடுக்க முன்வர வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

    • நோயாளிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்
    • 10 இடத்தில் காணாறுகள் செல்கிறது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், துத்திகாடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

    பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதாகவும், முடியாத நேரத்தில் டோலி கட்டி மருத்துவமனைக்கு நடந்தே தூக்கி செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவ மனை உள்ளிட்ட வெளியிடங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டி தான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர்.

    இதில் பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்துச் சென்றபோது இறப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது.

    கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாத தால் கிராமத்திற்குள் வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது. துத்திக்காடு கிராமத்தில் இருந்து தெள்ளை மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 10 இடத்தில் காணாறுகள் செல்கிறது.

    ரேசன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

    தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராமத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

    தற்போது வரை ஆற்றில் தண்ணீர் செல்வதால், மிகவும் சிரமப்பட்டு ஆற்றை கடந்து செல்கின்றனர்.

    எப்போது மழை பெய்தாலும் இந்த கிராமத்திற்கு ஆற்றைக் கடந்து செல்வது மிகவும் சிரமமான காரியம். சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    கிராம மக்கள் செல்லும் சாலையில் தெரு விளக்குகள் கூட இல்லை. இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி செல்வர். தார்சாலை அமைப்பதற்கு பலமுறை அளவீடு செய்தும் இதுவரை சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.

    துத்திக்காடு கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு செல்ல ஆற்று வழி தவிர வேறு எந்த வழியும் இல்லை.

    இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக் கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு 3 அடி அகலத்தில் சாலையும், கடந்து செல்ல 9 இடங்களில் தரைப்பாலமும் அமைத்துக் கொள்ள வனத்துறையினர் மூலம் அனுமதி உடன் கூடிய தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் சாலை அமைப்பதற்கு நபார்டுவங்கி திட்டத்தின் கீழ் நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மலைப்பகுதியில் வாழும் மாணவர்கள் படிப்பதற்காக அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி அங்கு உள்ளது.

    போக்குவரத்திற்கு லாயக்கற்ற கரடு முரடாக கிடக்கும் இந்த வழியில் ஆசிரியர்கள் மிகவும் சிரமத்துடன் வந்து செல்கின்றனர்.

    இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது, 2 சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் தவறி கீழே விழுந்து கை உடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அச்சப்படுகின்றனர்.

    கல்வி கற்க அதிக ஆர்வத்துடன் மாணவர்கள் இருக்கும்போதிலும், சாலை வசதியை காரணம் காட்டி ஆசிரியர்கள் பள்ளிக்கு சரிவர வராததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது.

    உண்டு உறைவிடப் பள்ளியில் 3 வேளையும் மாணவர்களை அமர வைத்து கல்வி கற்பதோடு, அவர்களுக்கு சத்தான உணவு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அரசு வழங்குகிறது.

    ஆனால் இந்த பள்ளிக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் எங்கே செல்கிறது என தெரியவில்லை. சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே மலைகிராமத்திற்கு சாலை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கிராம மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.

    வனத்துறை சார்பில் அனுமதி வழங்கியும் கூட சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சாலை வசதி மட்டும் அரசு செய்து கொடுத்தால் போதும். மற்ற தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்வோம்.

    இனியாவது அரசாங்கமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மலைகிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×